Friday, August 12, 2011

வரலாற்று நாயகன் ஈ. வெ. ராமசாமி.

ஈ. வெ. ராமசாமி (செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக்கராணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையே, அந்த மூடநம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கை, கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமைவாயந்த திராவிடர்களை பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் பெரியார் எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காக செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிகிடந்த சாதிய வேறுபாடுகளை குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு பெரியார் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளார். இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பலத் தாக்கங்களை ஏற்படுத்தியவை.

இளமைக் காலம்


இளமையில் பெரியார்
பெரியார் செப்டம்பர் 17, 1879, ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் எனும் இயர் பெயர் கொண்டவராய் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார்.இவரின் குடும்பத்தினர் கன்னடத்தைத் தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். (தெலுங்கு அன்று). இவரின் தந்தை வெங்கட்ட (நாயக்கர்) மிக வசதியான வணிக பின்னணியை கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்ன தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் தமையனரான கிருஷ்ணசாமி, தமக்கைகள் கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி ஆவார்கள். பின்னாளில் இவர் தந்தை பெரியார் என மரியாதையுடன் தமிழர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
1929, இல் பெரியார் சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் , தன் பெயரின் பின் வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்கு பின்னாள் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். பெரியார் மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி கன்னடம் ஆகும். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை, ஐந்து வருடங்கள் மட்டுமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார். தன்தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் ப்ண்டிதரின் உபதேசங்களை கேட்கும்படி தன்தந்தையால் பெரியார் பணிக்கப்பட்டிருந்தார். அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் உபதேசங்களை மிக ஆர்வமுடனும், அவரின் இந்து புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகந்தங்களையும் துடுக்குடன் அவ்விளவயதிலேயே வினவினார். அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் இந்து ஆரிய எதிர்ப்புக் கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின. பெரியார் வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின் மீது வஞ்சகத்துடன், அவர்களை சுரண்டுவதற்காக போற்றபட்ட போர்வையாக போர்த்தப்பட்டுள்ளதை களையவேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமயகுருமார்களிடமிருந்தும் இம்மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார்.
பெரியாரின் 19 வது வயதில் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம் சிறு வயது முதல் நேசித்த, 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மையார் தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்கு தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு வருடங்கள் பெண் மகவை ஈன்றெடுத்தார், அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது. அதன் பிறகு அவர்களுக்கு பிள்ளைப் பேறு இல்லை

திராவிடர் கழகம் (1944-முதல்)

 திராவிடர் கழகம் உருவாதல்

1944 இல் நீதிக்கட்சித் தலைவராக பெரியார் முன்னின்று நடத்திய நீதிக்கடசிப் பேரணியில் திராவிடர் கழகம் எனப் பெரியாரால் பெயர் மாற்றப்பட்டு அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. இருப்பினும் பெரியார் நீதிக்கட்சியைத், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றியதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து மாற்று அணியை, நீதிக்கட்சியின் நீண்ட அனுபவமுள்ளவரான, பி.டி. ராஜன், தலைமையில் துவக்கப்பட்டு 1957 வரை அம்மாற்று அணி செயல்பட்டது.
திராவிடர் கழகத்தின் கொள்கை நகரமக்களிடமும், மாணவ சமுதாயத்தினரிடமும் வெகு விரைவாகப் பரவியது. இக்கட்சியின் கொள்கைகளும் இதன் சார்ந்த செய்திகளும் வெகு விரைவிலேயே கிராமத்தினரிடமும் பரவியது. பார்ப்பன புரோகிதர்களின் அடையாளங்களான இந்தி மற்றும் சமயச்சடங்குகள் தமிழ் பண்பாட்டுக்கு விரோதமானவை என அடையாளம் காணப்பட்டு விலக்கிவைக்கப்பட்டன. அவ்வடையாளங்களின் பாதுகாவலர்களாக விளங்கும் பார்ப்பனர்கள், இந்நிலையை எதிர்த்து வாய் மொழித் தாக்குதல்களை தொடுக்கலாயினர்  . 1949 முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்படலாயினர். திராவிடர் கழகம் தலித்களுக்கு எதிராக பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டனர். பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள்  இவைகளில் தனிக்கவனம் செலுத்தினர்.

அண்ணாதுரையுடன் கருத்து வேறுபாடு

1949 இல் பெரியாரின் தலைமைத் தளபதியான கஞ்சிவரம் நடராசன் அண்ணாதுரை பெரியாரிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) (Dravidan Progressive Federation), என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார். இந்த பிரிவு பெரியார் மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் என்க கூறப்படுகின்றது. பெரியார் திராவிடநாடு அல்லது தனித்மிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார் ஆனால் அண்ணாதுரை தில்லி அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கரை காட்டினார். அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர். பெரியார் தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிருத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, முடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காக சிறிதும் விலகிநிற்க அல்லது விட்டு கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆகையால் பெரியார் தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களை சமாதானப்படுத்தினா. பெரியாரிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள், ஜூலை 9, 1948 அன்று பெரியார், தன்னை விட 40 வயது இளையவரான மணியம்மையாரை மறுமணம் புரிந்த்தை காரணம் காட்டி கட்சியிலிருந்து அண்ணாதுரைத் தலைமையில் விலகினர்

அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கியத் தலைவனை வணங்கி கண்ணிர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த காரணத்தினால் பெரியார் அவர்களின் திமுக கட்சியை கண்ணீர்துளி கட்சி என அதுமுதல் வர்ணிக்கலானார.

இறுதி காலம்:
1956 இல் சென்னை மெரினாவில் இந்து கடவுளான ராமரின் உருவப்பட்ம்   எரிப்பு போராட்டத்தை பெரியாருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பி.கக்கன் அவர்களால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பெரியார் அப்போராட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1958 இல் பெரியார் மற்றும் அவரது செயல்வீரர்கள் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் பெரியார் ஆங்கிலத்தை, இந்திக்கு மாற்றுதலான அலுவலக மொழியாக அரசாங்கத்திடம் வலியுறுத்திக் பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார். 1962 இல் பெரியார் தனது கட்சியான திராவிடர் கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக கி.வீரமணியை முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் நியமித்தார். ஐந்தாண்டுகளுக்குப்பிறகு பெரியார் வடஇந்தியா சுற்றுப்பயணம் மூலம் சாதியங்களை ஒழிக்கப் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின் இறுதி கால நெருக்கத்தில் அவருக்கு யுனஸ்கோ விருது இந்திய கல்வி அமைச்சர் , திரிகுனா சென் அவர்களால் சென்னையில் (மதராசில்), ஜூன் 27, 1973 அன்று வழங்கப்பட்டது.

மறைவு:

பெரியாரின் கடைசி கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 அன்று கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் சமுதாயத்தில் அனைவரும் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துகொண்டார். அதுவே அவரின் கடைசிபேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்றப் பெரியார், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட பெரியார், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்

Tuesday, August 2, 2011

கூகுளின் அதிரடியால் சரியும் பயர்பொக்ஸ்
பயர்பொக்ஸ் பிரவுசரில் இதுவரை இயங்கி வந்த கூகுள் டூல்பார் தற்போது புழக்கத்தில் இருக்கும் பயர்பொக்ஸ் பதிப்பு 5 தொடங்கி இனி வர இருக்கும் பிரவுசர்களில் கிடைக்காது என கூகுள் அதிரடியாக அறிவித்துள்ளது.இந்த டூல்பார் மூலம் தான் தானியங்கி மொழி பெயர்ப்பு, கிளவ்ட் புக்மார்க், ஹிஸ்டரி சேவ் செய்தல், தேடல் வசதி போன்றவை பயர்பொக்ஸ் பிரவுசரில் கிடைத்து வந்தன. இனி இவை பயர்பொக்ஸ் பிரவுசரில் கிடைக்காது. இதற்குக் காரணம் குரோம் பிரவுசரை கூகுள் முன்னுக்குக் கொண்டு வர ஆசைப்படுவதே ஆகும்.
தொழில்நுட்ப ரீதியாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை கூகுள் நிறுவனத்தினைப் பார்த்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அந்நிறுவனம் வழங்கும் குரோம் பிரவுசரே சாட்சி. இதன் பயன்பாடு தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், இதன் பயன்பாடு வேகமாக உயர்ந்து உள்ளது. பிரவுசர் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடும்.
கடந்த ஓராண்டில் குரோம் பிரவுசர் பயன்பாடு 7.24%லிருந்து 13.11% ஆக உயர்ந்துள்ளது. சில குறிப்பிட்ட தகவல் தொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு இன்னும் கூடுதலாக 15% லிருந்து 24.4% ஆக உள்ளது.
மற்ற பிரவுசர்களில் சபாரி பிரவுசர் நல்ல வளர்ச்சியைக் கொண்டுள்ளது. 2.6% கூடுதலாக இதற்கு வாடிக்கையாளர்கள் மாறி உள்ளனர். தொழில்நுட்ப தளங்களில் சபாரி பிரவுசரின் பயன்பாடு 10.5% ஆக உள்ளது.
குரோம் வளர்ச்சியில் அதிகம் பாதிக்கப்பட்டவை பயர்பொக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களாகும். மொஸில்லா பயர்பொக்ஸ் பயன்பாடு 23.8% லிருந்து 21.7% ஆகக் குறைந்தது. தொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு 34.4% லிருந்து 30.9% ஆகக் குறைந்திருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 10% அளவிற்குக் குறைந்தது இந்த ஆண்டில் தான். அதிகம் பாதிக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் தானாகவே இந்த வீழ்ச்சியைத் தேடிக் கொண்டது எனக் கூறலாம். இதன் பயன்பாடு 60.3%லிருந்து 53.7% க்குச் சென்றுள்ளது.
தொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு, 37.9% லிருந்து 31.1% ஆகக் குறைந்துள்ளது. மொத்தத்தில் இதன் பயன்பாடு விரைவில் 50% க்கும் கீழாகச் செல்லலாம். இதற்குக் காரணம் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9னை, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயக்க முடியாத நிலையில் வடிவமைத்ததுதான்.
அடுத்தபடியாக பாதிப்பு பயர்பொக்ஸ் பிரவுசருக்குத்தான். கடந்த ஆண்டுகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன் ஒப்பிடுகையில் பயர்பொக்ஸ் பிரவுசர் தான் மிகவும் பாதுகாப்பான, நிலையாக இயங்கும் பிரவுசராக மதிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு அம்சங்களை குரோம் எடுத்துக் கொண்டுள்ளது.
பயர்பொக்ஸ் பிரவுசருக்கான கூகுள் டூல்பார், பயர்பொக்ஸ் பிரவுசர் 5 மற்றும் இனி வெளியிடப்பட இருக்கும் அடுத்த பதிப்புகளில் இயங்காது என அறிவித்துள்ளது. பதிப்பு 4 வரை மட்டுமே கூகுள் டூல் பார் இயங்கும்.
தற்போது பயர்பொக்ஸ் 5 பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பயர்பொக்ஸ் 6 ஆகஸ்ட் மத்தியிலும் அதன் பின் 6 வாரங்கள் சென்ற பின்னர் பயர்பொக்ஸ் 7 பதிப்பும் வெளியிடப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பயர்பொக்ஸ் பதிப்பு 5 கூகுள் டூல்பார் இல்லாமல் இருப்பதனாலேயே பயர்பொக்ஸ் பயன்படுத்துபவர்களில் பலர் புதிய பதிப்பு 5க்கு மாறாமால் உள்ளனர். இவர்கள் புதிய கூகுள் டூல்பாரினை எதிர்பார்க்கின்றனர் என்று மொஸில்லா நிறுவன வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார்.
பயர்பாக்ஸ் பிரவுசரில் பல விஷயங்கள் கூகுள் டூல் பார் மூலமே இயக்க முடிந்தது. எடுத்துக்காட்டாக பலர் கூகுள் டூல் பார் மூலம் தான் புக்மார்க்ஸ் சேவ் செய்தனர். இப்போது அந்த டூல் பார் இயங்கவில்லை என்றால் புக்மார்க்ஸை இழக்க வேண்டியதுதான் என எண்ணுகின்றனர். ஆனால், அவை www.google.com/bookmarks என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் என்பது பலருக்குத் தெரியவில்லை.
மொஸில்லா நிறுவனம் தன் பயர்பொக்ஸ் பிரவுசர் மூலம், பிரவுசர் பயன்பாடு மற்றும் தேடுதல் குறித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களை கூகுள் நிறுவனத்தின் ஆய்வுக்குத் தொடர்ந்து தந்து வந்தது. இதற்கான ஒப்பந்தம் 2004ல் மேற்கொள்ளப்பட்டு மூன்று முறை புதுப்பிக்கப்பட்டு தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
இதற்கு முன்னர் மொஸில்லா தன் பயர்பொக்ஸ் பிரவுசரை, கூகுள் டூல்பாருடன் சேர்த்தே வழங்கி வந்தது. இதற்கு கூகுள் நிறுவனம் கணிசமான பணத்தை மொஸில்லாவிற்கு வழங்கி வந்தது. இப்போது அனைத்தும் முடிவிற்கு வந்துள்ளது.
ஆனால் மொஸில்லா இதனால் கலவரம் அடையவில்லை. மீண்டும் தன்னுடைய மொஸில்லா பயனாளர்களின் தொழில் நுட்ப குழுவினை உயிர்ப்பித்துள்ளது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பல தகவல்களை விவாதித்து தங்கள் படைப்புகளில் பயன்படுத்த முடியும்.
இவை பயர்பொக்ஸ் பிரவுசர் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த பயன்படும். உடனடியாகச் செயல்பட்டு மொஸில்லா நிறுவனம் தன் பயர்பொக்ஸ் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டியுள்ளது. உடனே அவர்களின் பயத்தைப் போக்க சில மாற்றங்களையும் வசதிகளையும் பயர்பொக்ஸ் தராவிட்டால் அது பிரவுசர் சந்தையில் தன் பங்கினை இழக்கும் என்பது உறுதி.